Tuesday 22 May 2018

உன்னுடன் பேசாத ஒவ்வொரு நொடிகளும் யுகங்களாக கடக்கிறது; உன் நினைவுகள் தந்த வலிகளுடன் அந்த யுகங்களை கடத்தி வருகிறேன்...

Friday 11 March 2016

அழகிய தமிழ் பெயர்கள் 

பொன்னியின் செல்வன் : - புத்தகம் 

குந்தவை

சேந்தன் அமுதன்

மதுராந்தகர்

கடல் புறா: புத்தகம் 

அநபாயர்

அகூதா

சீதையின் ராமன் தொடரில் அறிந்த பின் வருபவை:

கார்க்கி வைஷ்ணவி
உமையாள்
ஸ்ருதிக்கீர்த்தி
மாண்டவி
அகலிகை
தாடகை
சுனைனா
கார்த்யாயினி
மைத்ரேயி
யாக்யவல்கியர்
மித்திரர்
சதானந்தர்
மிதிலை
ஜனகர்
ஸ்மிருதி
சுபாகு
சத்ருகனன்
வஷிஸ்டர்
சிமி
இமானுவன்


Tuesday 26 January 2016

அர்த்தமுள்ள குடியரசுத்தின விழாவை எப்போது கொண்டாடவுள்ளோம்?

ஜனவரி 26, 2016
67வது குடியரசுத்தின விழாவை இன்று நாடே வெகுவிமர்சையாக கொண்டாடி முடித்துள்ளது.... ஆனால் உண்மையாகவே அந்த தினத்தின் நோக்கமும், முக்கியத்துவமும் உணர்ந்து தான் கொண்டாடுகிறோமா என்பது தான் எனக்குள் எழும் சந்தேகம்.... நிச்சயமாக இல்லை என்கிறது என் ஞானம்.... நம்மை அடக்கி பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த ஆங்கிலேயர் பிடியில் இருந்து முழுவதுமாக விடுபட்டு நமக்கென்று தனி அதிகாரம் வகுத்து வாழ துவங்கிய நாள்.... நமக்கு என்பது இந்த இடத்தில் நான் குறிப்பிடுவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிரஜைகளுக்குமான சமமான உரிமையை நிலைநிறுத்தியது என்று அர்த்தம்... ஆனால் இன்றோ சுயநலத்திற்காகவும், பணத்திற்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும், பேராசைக்கும் என அற்ப காரியங்களுக்காக நம் முன்னோர்கள் பல்வேறு இன்னல்களை தாண்டி பெற்ற உரிமையை இழந்துக்கொண்டு வருகிறோம் என்பது தான் நிதர்சனம்..... அனைவருக்கும் இலவச கல்வி,  சமமான உரிமை, சமூக கட்டமைப்பு, மதசார்பின்மை, பாதுகாப்பான சூழல், சுத்தமான காற்று, சுகாதாரமான சுற்றுச்சூழல், நல்ல உணவு, தண்ணீர் என எதுவும் முழுமையாக பூர்த்தியாகாமல் இத்தனை ஆண்டுகளாக குடியரசுத்தினம் கொண்டாடி என்ன உபயோகம்.... இன்னமும் இந்தியா சுதந்திரம் அடையவில்லை என்பதற்கு சில உதாரணங்கள்:
1. 3 மருத்துவ மாணவிகள் மர்மமான முறையில் மரணம், அதிகக்கட்டண வசூல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
2. ஒட்டுக்காக அடிமைப்போல் அடக்கி சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இன்னமும் சமூக பார்வையே அறவே இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறிப்பாக துப்புறவுப் பணியாளர்கள் சமூகம்.
3. காசுக்கு குடிநீர், உணவு, வீடு
4. அதிகரித்து வரும் ஆதாய குற்றங்கள்
5. அதிகரித்து வரும் பதுக்கல் பணம் (கருப்புப்பணம்)
6. மத வன்முறைகள்
இன்னும் ஏராளம்...  குடியரசுத்தினத்தை கொண்டாடும் இந்த வேலையில் நான் படித்த, அறிந்த, அனுபவ ரீதியாக உணர்ந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த பதிவிற்கான காரணம்...  இதை தைரியமாக கூட பொது தளத்தில் பதிவு செய்ய முடியாது சூழ்நிலையில் உள்ளது இன்னும் கேவலம்...  எங்கே என் பணிக்கோ,  என் கருத்துக்களுக்கோ பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான்.... கேட்கலாம் ஏன் மற்றவர்கள் அவர்களின் கருத்தை பொதுப்படையாக கூறுவது இல்லையா என்று...  நிச்சயமாக அதிகாரம் அல்லது பணம் துணையுடன் தான் அவர்கள் அதை செய்ய முடியும்..... ஆனால் யார் நலனுக்கும் உதவாமல் அனைத்து அதிகாரமும் கொண்டு ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு வெட்கமே இல்லாமல் நாட்டின் பாதுகாவலர்களான முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்பவர்களை விட நான் குறைந்தவன் இல்லை.... ஒவ்வொரு ஆட்சியாளனும், அரசியல் பிரதிநிதிகளும் எதற்காக நாம் இங்கே நிற்கிறோம்,  யாருக்காக, இவர்கள் நமக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து,  மரியாதை, அதிகாரம் கொடுத்ததற்கான காரணத்தை எண்ணுபவர்களானால் அன்றே இந்த தினத்தின் நோக்கம் நிவர்த்தியாவதாக அர்த்தம்.... 

Wednesday 20 January 2016

மறக்க முடியாத பொங்கல் பண்டிகை

ஜனவரி 15, வெள்ளிக்கிழமை,
மறக்க முடியாத பொங்கலை என் வாழ்க்கையில் ஏற்படுத்திய புதிய தலைமுறை நிர்வாகத்திற்கும்,  மார்ட்டின் அண்ணாவிற்கும் நன்றி.... இதுபோல் ஒரு பொங்கல் பண்டிகை இருந்ததில்லை, இனிமேல் நடக்கும் என்றும் தோன்றவில்லை..... பிடித்த துறையில் பிடித்தமாதிரி சூழல் இருந்தாலும் ஏதோ மனம் இன்பமாக இல்லை... காரணம் பல இருந்தாலும் பணியில் ஏற்பட்ட விரக்தியும் காரணம் தான்.... ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் நினைத்தது போல், மிகவும் மன நிம்மதியான நாளாக பொங்கல் பண்டிகை இருந்தது..... இசை  நடனம் என கொண்டாட்டத்தினால் மட்டுமின்றி ஏதோ ஒரு வகையில் உண்மையான நாளாக இருந்ததற்கு தான் அந்த நாளுக்கு அவ்வளவு சிறப்பு....  ஏதோ ஒரு வகையில், வழியில் யாருக்காவது உபயோகமாகவும், உண்மையாகவும், மனதில் எழும் வார்த்தைகள் மாறாமல் கூறும் நாள் அமையவில்லை என்று எண்ணி இருந்தபோது, பொங்கல் பண்டிகையன்று அந்த வாய்ப்பு கிடைத்தது.... ஆதிவாசி மக்களான குரும்பர் இன மக்களின் பாரம்பரிய வழக்கத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது... நேரலையாக ஒளிபரப்பான இந்த செய்தி கொண்டாட்டங்கள் உடன் அவர்களின் அவல நிலை, விவசாயத்தில் அவர்களுக்கு உள்ள ஈடுபாடு, அரசு செய்ய வேண்டியவை குறித்து கருத்தை பதிவு செய்யும் விதமாக அமைந்திருந்ததே என் இன்பத்திற்கு காரணம்..... குரும்பர் இனம் என்பது தற்போது அழிந்து வரும் பழங்குடியின மக்கள் என சொல்லப்படுகிறது.... ஆனால், அவர்களின் தேவை நமக்கு இன்றியமையாதது... காரணம், விவசாயத்திற்கும், அவர்களுக்கும் உள்ள உறவு அபரிதமானது... தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே செம்பக்கரை மற்றும் செம்மநாடு ஆகிய இரு பகுதிகளில் மட்டுமே இந்த இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது..... மொத்தமாகவே 100 குடும்பங்களுக்கு உள்ளாகவே உள்ள இந்த இன மக்களின் வாழ்வாதராம் விவசாயம்...அதுவும் முழுக்க முழுக்க இயற்கை முறையிலானது ....நமது பாரம்பரிய சிறு தானியங்களான சாமை, கேழ்வரகு, சோளம் உள்ளிட்டவைகள்.... ஒரு காலத்தில் தான் இந்த விவசாயம் தற்போது தேயிலை தோட்டத்திற்கு கூலி வேலைக்காக சென்று வருகின்றனர்.... இயற்கை காரணம் இல்லை...வழக்கம் போல் மனிதர்கள் தான்..... தேயிலை தோட்டத்தின் ஆக்கிரமிப்பு தான் அந்த இனத்தின் விவசாயத்தை அழிக்க காரணம்..... ஆனால், இந்த இன மக்களுக்கு இவளோ சதவிகிதம் நிலம் ஒதுக்க வேண்டும் என அரசு ஆவணங்களில் உள்ளது...அதாவது ஒரு குடும்பங்களுக்கு தலா 3 ஏக்கர் கொடுக்க வேண்டும் என்பது...ஆனால், செம்பகரை பகுதி வாசிகளான 35 குடும்பங்களுக்கு மொத்தமாகவே 2 ஏக்கர் தான் உள்ளது....இதிலிருந்தே தெரியும் சட்டம் சடங்காகவும், அதனை பாதுகாக்க வேண்டியவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.... இந்த நிலத்தை அவர்களுக்கு மீட்டுத்தரும் பட்சத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு மட்டுமின்றி பல லட்சம் மக்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவு பொருட்களை உண்ணும் வழிவகை செய்ய முடியும்... இதை நான் பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி.... இதனை எந்தவொரு அச்சமின்றி, சுயலாபம் இன்றி இந்த செய்தியை எடுத்து ஜான்சன் அண்ணாவிற்கு எனது வணக்கங்கள்..... இதேபோல், மலைவாழ், பழங்குடியின மக்களுக்கு பல்வேறு வகையில் அடிப்படை வசதியின்றி வாழும் அவல நிலை உள்ளது..... அதை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் இயற்கை விவசாயம் மீண்டு வர வாய்ப்புள்ளது....... இந்த பதிவின்போது தான், சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் முழுமையாக இயற்கை விவசாயத்தில் சிக்கிம் மாநிலம் மாறியுள்ளதாக கேள்விப்படுகிறேன்..... அது சாத்தியம் என்றால், இதுவும் சாத்தியம் தான்.....

Tuesday 19 January 2016

உடனிருப்போரின் விருப்பத்திற்கு நடந்துக்கொண்டால் அக மகிழ்ச்சி அடையலாம்

ஜனவரி 19, திங்கட்கிழமை,
இன்றைய "சீதையின் ராமன் " இதிகாசத்தொடரில்,
📢 சுயநலமில்லாத,  கண்மூடித்தனமான அன்பு அக மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது (தசரதரின் மனைவிகளுக்கு தங்களின் 4 புதல்வர்கள் மீதும் அளவுக்கடந்த பிரியம் வைத்திருப்பது இன்பமான வாழ்க்கையை தருவது போன்ற காட்சிகள்)
📢 உடன் இருப்போரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துக்கொண்டாலும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும் ( முதலில் சுமித்ரை, கையேயி ஆகியோரை சந்தித்து விட்டு 3 வதாக கோசலையா காண புதல்வர்கள் ராமன் உட்பட 4 பேரும் வரும்போது அவர்களிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் கோசலை. அதற்கு பிறரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே முதன்மை பணி என கோசலை கூறிய அறிவுரையை ராமன் நினைவூட்டி கோசலையின் கோபத்தை தணிக்கிறான்).
📢 உறவுகளை ஆழ்ந்த,  ஆத்மார்த்தமாக, அன்பாக அழைப்பது அவசியம். இதன்மூலம், உறவுகள் நெருக்கமாவதுடன், இன்பமான குடும்ப சூழலும் அமையும் (போருக்கு சென்றுள்ள தன்னுடைய தந்தையின் தம்பி நலனை "இளைய தந்தை " என சீதா குறிப்பிடுவது) 

Monday 18 January 2016

வீடுகள் தோரும் fan-யாக செயல்பட்ட மரங்கள்

ஜனவரி 18, திங்கட்கிழமை
சீதையின் ராமன் இன்றைய தொடரில் நான் உணர்ந்த உன்னதமான கருத்துக்கள்:
அதற்கு முன்னால் ஒன்று சொல்ல விரும்புகிறேன்... அருமையான தொடர்; அனைவரும் பார்க்க வேண்டியது; இன்றைய சூழலில் ராமாயணம், மகாபாரதம் குழந்தைகளுக்கு அறியப்பட வாய்ப்பில்லை... காரணம் எத்தனை பெற்றோர்களுக்கு அந்த காவியம் தெரியும் என்பது மில்லியன் டாலர் கேள்வியே.... ஆனால் இந்த இதிகாசங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதன் தேவை ஏற்பட்டுள்ளது... அதை இந்த தொடர் பூர்த்தி செய்வதாகவே கருதுகிறேன்..... ஒவ்வொரு முறையும் தொடரை பார்க்கும்போது என்னுள் ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை....  சரி இன்றைய தொடரில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்:
🎎 ஒரு நாட்டுக்கு ஞானம் எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவில் வீரமும் முக்கியம் (ஞானத்திற்கு பெயர்ப்போன ஜனகரின் மிதிலை நாட்டு மீது போர் என்று வரும் போது,  அங்குள்ளவர்கள் போர்க்கலையை பயிலாததால், சஞ்சலத்துடன் ஜனகர் யோசிப்பது... இருந்தபோதிலும் மனதினத்துடன் போருக்கு ஜனகரின் தம்பி செல்வது)
🎎 எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், கல்விக்கு தரும் மரியாதையும், ஒரு அரியாசனத்திற்கும் தரும் மரியாதையையும் முக்கியம். எதிலையும் ஒரு மரபு பின்பற்றுவது உயர்ந்த குணங்களை பெற உதவும்...அதாவது, பொருமை, மனதில் உறுதியும், எந்த சூழலிலும் நிதானமாக செயல்படுவது, பெரியவர்கள் என்ன சொல்லாலும் மதித்து நடக்க வேண்டும் (ராமன் உட்பட நால்வரும் ஆசிரமத்தில் வேதங்கள் கற்றுக்கொண்டு அயோத்திக்கு திரும்பினாலும் சடங்குகள் முடித்த பின்பே அன்னையர்களை பார்க்க வேண்டும் என்று நிபந்தனைகள் இடுவது, அதனை மறுக்காமல், மறு கேள்வி கேட்காமல் மதித்து வனத்தில் தங்குவது)
🎎 இது சுவாரஸ்யமான ஒன்று... இன்று நாம் fan என்று சொல்லப்படும் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியுமா என்று கேள்வி எழும்... எனக்கும் பல முறை தோன்றியுள்ளது, அன்றைய காலத்தில் எவ்வாறு வாழ்ந்திருப்பர் என தோன்றும்... அதற்கு விடைப்பெற்றேன் இன்று. ஜன்னல்கள் அல்லது திறந்தவெளி அமைப்பில் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும்..  மரங்கள் வீடுகளில் சூழ்ந்திருப்பதால் சுத்தமான, தூய்மையான காற்று இன்றைய மின்விசிறியை விட சிறப்பாகவே இருந்திருக்கும்..  (அன்றைய காலத்தில் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைகள், அரண்மனைகள்).
🎎 ஒரு வயிற்றில் பிறந்தால் தான் சகோதரம் எண்ணம் வரவேண்டியது என்பதில்லை....  மேலும், விட்டுக்கொடுத்து வாழ்வதும், நம்முடன் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து மூத்தோர் என்னும் பண்பை வெளிப்படுத்துவது,  மகிழ்ச்சியையும், நிம்மதியான வாழ்க்கையை தரவல்லது. (அயோத்தி மன்னர் தசரதரின் 3 மனைவிகளின் ஒற்றுமை குணமும், புத்திர பாக்கியம் வேண்டி நடத்தும் யாகம் மூலம் கிடைக்கும் சாதத்தை முதல் மனைவி கோசலை உண்ணாமல் 2வது மனைவியான கையேயிக்கு அளிப்பது, ஆனால் அதை இருவரும் 3வது மனைவியான சுமித்ரைக்கு வழங்குவது)
🎎 தாராளமான மனதும், நல்ல பண்பும், செயலும், எவ்வளவு நற்பெயரும், புகழும் பெற்றாலும் பெரியவர்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் வழியில் நடப்பது, கர்வம் கொள்ளாமல் நடப்பது உள்ளிட்ட பண்புகள் நமக்கான இன்பத்தை நாம் தேடாமல் கிடைக்க வழிவகை செய்யும் (ராமன் முதலில் தன்னை ஈன்ற தாயான கோசலையை காண எண்ணாமல் சுமித்ராயை காண செல்லும் போது, சிறிதும் சஞ்சலமின்றி புதல்வர்கள் தம்மேல் கொண்ட அன்பை தனது அக்காவான கோசலையும், கையேயுக்கும் நன்றி சொல்வது, அவர்களை காணும்படி 4 புதல்வர்களுக்கும் உத்தரவிடுவது) 

Saturday 16 January 2016

"உயிர் பயம் காட்டிய நாள்"

ஜனவரி, 15, வெள்ளிக்கிழமை,

ஜனவரி 14, வியாழக்கிழமை இரவு பொங்கல் பண்டிகைக்கான நேரலைக்கு குன்னூர் நோக்கிய எனது பயணம் மிகுந்த உற்சாகத்துடனும், சாகசத்துடனும் இருந்தது.... பயணம் துவங்கியதில் இருந்த வருத்தம், சிறு சஞ்சலம் மேட்டுப்பாளையம் தாண்டி கல்லாறு வாகன சோதனை சாவடி அருகே சென்றபோது மறைந்தது..... காட்டு யானை ஒன்று தெருவோரம் உள்ள வேலியை உடைத்து எதையோ சாப்பிட்டு கொண்டிருந்தது.... முதலில் நான் தான் பார்த்தேன்.... அது காட்டு யானை என்பதை உறுதி செய்வதற்குள் எங்க கார் கடந்து சென்றுவிட்டது....இருந்தபோதிலும், காரை திருப்பி எடுத்து வந்து  அதை காட்சிப்படுத்த முடிவு பண்ணினோம்..... யானையின் பின்னால் 50மீட்டர் தொலைவில் காரை நிறுத்தி அதன் வெளுச்சத்தில் மார்ட்டின் அண்ணா யானையை படம் பிடித்து கொண்டிருந்தார்... ஒரு 10 நிமிடங்கள் இருக்கும், அதன் மேல் தொடர்ந்து வெளுச்சம் பட்டதாலோயோ என்னவோ, யானை எங்களை நோக்கி வந்தது. பயத்தில் காரை பின்னோக்கி எடுக்க டிரைவர் முயன்றார்...ஆனால், ஒளிப்பதிவாளர் தீபன் சமயோசிதமாக காரை முன்னெடுத்து வலது பக்கமாக இயக்க சொன்னார்., அதாவது யானை இடது பக்கமாக வருவதை அடுத்து அவர் அதன்படி கூறியுள்ளார்.... அது வேகமாக நேகளை நோக்கி வந்தது, நாங்கள் திரும்பியதை உணர்ந்து அதுவும் எங்களை நோக்கி பாய்ந்தது ....அப்பப்பா என்னால் மறக்கவே முடியாது.... உயிர் பயம் அன்றைய தினத்தில் தான் உணர்ந்தேன்.. அங்குள்ளவர்களுக்கு அது பழகிய சம்பவம்....ஆனால், எனக்கோ காட்டு யானையை பார்ப்பது முதல் முறை...அதுவும் இதுபோன்று அச்சத்துடன் நடைபெற்ற இந்த சம்பவம் வாழ்கையின் முக்கிய நாளாகாவே மாறிவிட்டது..... சுமார் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானையாக இருக்கக்கூடும் என மார்டின் அண்ணா சொன்னார்...... தீபனின் வாரத்தைகளே எங்களை அந்த நிமிடங்களை சிரமம் இல்லாமல் ஆக்கியதற்கு காரணம் .... அடுத்த நாள் குன்னூரில் நான் பார்த்த சூழல் மற்றும் யானையினுடன் ஏற்பட்ட சம்பவம் ஒரு கருத்தை மட்டும் தெளிவாக என் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது....
வெள்ளைக்காரனால் அறியப்பட்ட நீலகிரி மாவட்டம் அவர்கள் இருந்தபோது கூட இந்தளவு பாதிக்கப்பட்டிருக்கும் என சொல்ல முடியாது, ஆனால் பின்னாளில் நாம் அந்த இயற்கையை கொலை செய்ததை அந்த காட்சிகளும், சம்பவம் உணர்த்தியது...... தனியார் தேயிலை எஸ்டேட், குடியிருப்புகள், நட்சத்திர விடுதி, லாட்ஜ் போன்ற காரணங்களினாலே யானைகள் வழத்தடம், வனவிலங்குகளின் வாழ்விடம், பறவைகளின் சரணாலையம் ஒட்டுமொத்தத்தில் வனங்கள் அழிந்துவிட்டது, மீதமுள்ள வனங்களும் அழிந்து வருகிறது... மக்கள் தொகைக்கு இடங்கள் அவசியம் என்றாலும் இதுபோன்று காடுகளை அழித்து வாழ்வது எந்தளவிற்கு ஏற்புடையது என்பது தெரியவில்லை....... இதைப்பற்றி எத்தனை முறை, எத்தனை பேர் எழுதுனாலும் போராடினாலும், உயிரை விட்டாலும் எதுவும் நடக்கப்போவதில்லை என்பது நான் அறிவேன்..... ஆனால், மனது கேட்கவில்லை....